Monday, April 20, 2026
No menu items!
Google search engine
Homeமாவட்டம்கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி 2026: மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் முன்னிலை? – கள நிலவரம் சிறப்பு...

கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி 2026: மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் முன்னிலை? – கள நிலவரம் சிறப்பு கட்டுரை

கிருஷ்ணகிரி: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி தொகுதியில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த முறை நேரடி இருமுனைப் போட்டியாக இல்லாமல், மும்முனைப் போட்டியாக மாறியிருப்பது தேர்தல் கணக்குகளை சிக்கலாக்கியுள்ளது.

மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக செல்லக்குமார் களத்தில் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக அசோக்குமார் போட்டியிடுகிறார். இதே நேரத்தில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக முகுந்தன் பாண்டியன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் களத்தில் இருப்பது இந்த தொகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையில் உருவான தமிழக வெற்றி கழகம், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளை கணிசமாகப் பிரிக்கும் நிலையில் உள்ளது. இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதறக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான அசோக்குமாருக்கு எதிராக சில கிராமங்களில் கடும் அதிருப்தி நிலவுகிறது. “கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்காக குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதுவும் செய்யவில்லை” என்ற குற்றச்சாட்டுடன், அவரை கிராமங்களுக்கு உள்ளே அனுமதிக்க மறுத்த சம்பவங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிமுகவிற்கு சவாலாக மாறியுள்ளது.

மறுபுறம், காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் ஏற்கனவே இந்த பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அந்த அனுபவமும், உள்ளூர் தொடர்பும் அவருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது என்றே தற்போதைய கள நிலவரம் சுட்டிக்காட்டுகிறது.

தமிழக வெற்றி கழக வேட்பாளர் முகுந்தன் பாண்டியன், விஜய் மீது உள்ள ரசிகர் ஆதரவை நம்பி களத்தில் இறங்கியுள்ளாரானாலும், அந்த ஆதரவு வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனினும், அவர் அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரான மதியழகன் மேற்கொண்டுள்ள கட்சி மற்றும் மக்கள் தொடர்புப் பணிகள் பாராட்டுக்குரியதாக பல தரப்பினரிடமும் கருத்து நிலவுகிறது. இது கூட்டணிக்குள் நல்ல ஒத்துழைப்பை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொகுதி மக்களின் முக்கிய பிரச்சினைகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன. குறிப்பாக சுங்கச்சாவடி பிரச்சினை, கிரானைட் தொழில் பூங்கா அமைத்தல், ரயில் வசதி மேம்பாடு, மாங்காய் விளைச்சலுக்கு உரிய விலை, காமராசர் அவர்களுக்கு கேஆர்பி அணையில் சிலை அமைத்தல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதேபோல், பாடெதலா ஏரி கால்வாய் திட்டத்தை விரைவாக முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மொத்தத்தில், கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கடும் போட்டி நிலவி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments