காவேரிப்பட்டினம் அருகே நவீன தீண்டாமை? இலவச வீட்டு மனை பட்டாவில் சர்வே கற்கள் பிடுங்கி எறிந்ததாக குற்றச்சாட்டு – பட்டியல் சமூக மக்கள் போராட்ட அறிவிப்பு!

காவேரிப்பட்டினத்தில் நவீன தீண்டாமை!

0
180

காவேரிப்பட்டினம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள பன்னிஅள்ளி கிராமத்தில், தமிழ்நாடு அரசால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா நிலங்களில் நடப்பட்டிருந்த சர்வே எல்லைக் கற்கள் பிடுங்கி எறியப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவேரிப்பட்டினம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளது. இதையடுத்து, கிருஷ்ணகிரி வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலங்களை அளவீடு செய்து, எல்லைகளை நிர்ணயித்து சர்வே கற்களை நட்டு ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து, பட்டியல் சமூக மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு, அரசால் நடப்பட்டிருந்த சர்வே கற்களை பிடுங்கி எறிந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், “நாங்கள் என்ன செய்தாலும் நீங்கள் எதிர்த்து பேசக்கூடாது; எங்களிடமே வந்து நியாயம் கேட்க வேண்டும்” என்று சாதி ஆதிக்க மனப்பான்மையுடன் மிரட்டியதாகவும், சமூக அவமதிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் பட்டியல் சமூக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதேபோல் மற்ற தரப்பினரும் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இரு தரப்பினரின் புகார்களிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த அ.மாதேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாநில செயலாளர், காந்திநகர் பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது அவர் பேசுகையில், “சமூக நீதி, சுயமரியாதை மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுடன் பட்டியல் சமூக மக்கள் வாழ்வதை உறுதி செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் துணை நிற்கும். அரசால் வழங்கப்பட்ட பட்டா நில உரிமையை பறிக்க முயற்சிப்பவர்களுக்கும், நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கும் எதிராக சட்டரீதியான மற்றும் ஜனநாயக வழிப் போராட்டங்கள் தொடரும்” என்றார்.

மேலும், சர்வே கற்களை பிடுங்கி எறிந்ததாக குற்றம்சாட்டப்படும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பவத்தில் அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டப்படும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை கண்டித்து, வரும் திங்கட்கிழமை காந்திநகரில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வழங்கிய பட்டா நிலங்களில் உரிமை கோரும் பட்டியல் சமூக மக்களுக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டப்படும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், காவேரிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற தரப்பினரின் விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவம் தவெக ஆட்சியில் கிருஷ்ணகிரியில் நடைபெறும் பட்டியல் சமூக மக்களின் முதல் போராட்டம் என்பது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here