கிருஷ்ணகிரி அருகே ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

0
145

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஏரி மற்றும் நீர்நிலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஏரி மற்றும் நீர்நிலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்மடபுத்தூர், அம்மனேரி, கூழியம், கும்மனூர், தாசரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட வருவாய்த்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணி செயலாளர் மாதேஷ் மற்றும் திப்பனபள்ளி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஏரி மற்றும் நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தின்போது பேசிய நிர்வாகிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், ஏரிகளில் மீன்பிடி உரிமைக்கான பொது ஏலம் நடத்தும்போது சம்பந்தப்பட்ட ஏழு கிராம மக்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, வெளிப்படையான முறையில் ஏலத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

சென்னை உயர்நீதிமன்றம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட பிறகும் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், செம்மடபுத்தூர், அம்மனேரி, கூழியம், கும்மனூர், தாசரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, பின்னர் ஏரிகளில் மீன் வளர்ப்பதற்கான பொது ஏலத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் செம்மடபுத்தூர் ஊர் தலைவர் சின்னசாமி, கும்மனூர் ஊர் தலைவர் வீரப்பன், சின்னராகிமானப்பள்ளி கோவிந்தசாமி, சூலக்கரை மூர்த்தி, விசிக நிர்வாகி சார்லஸ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here