தண்ணீருக்காக தவிக்கும் மாணவர்கள்!கிருஷ்ணகிரியில் மதிய உணவு கூட கிடைக்காத அரசு பள்ளி அவலம்!

0
81

தண்ணீருக்காக தவிக்கும் மாணவர்கள்!கிருஷ்ணகிரியில் மதிய உணவு கூட கிடைக்காத அரசு பள்ளி அவலம்!கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்திற்குட்பட்ட மடக்கல் ஊராட்சியின் உளிபெண்டா கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த சம்பவம், தமிழக அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளின் உண்மை நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.குடிநீர் குழாய் சேதமடைந்ததால் 27 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படாத சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “படிக்க வரும் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவும் தர முடியாதா?” என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பள்ளியில் மதியம் 12.40 மணி வரை கூட சத்துணவு தயாராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் பசியுடன் காத்திருந்த நிலையில், அதிகாரிகள் எங்கே போனார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த விவகாரத்தை “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் நேரில் ஆய்வு செய்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததையடுத்து தான் அதிகாரிகள் விழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஊரக வளர்ச்சி துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சத்துணவு துறை அதிகாரிகள் பின்னர் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஒரு குடிநீர் குழாய் பழுதானதற்காக அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவு திட்டமே முடங்கியிருப்பது நிர்வாக அலட்சியத்தின் உச்சம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். “கோடிக்கணக்கில் திட்டங்கள் அறிவிக்கும் அரசு, மாணவர்களுக்கு குடிநீர் கூட உறுதி செய்ய முடியவில்லையா?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.சம்பவம் வெளியான பிறகே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் நலனில் அதிகாரிகள் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளனரா அல்லது செய்தி வெளியான பிறகே விழித்துக்கொள்கிறார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.இந்நிலையில், பள்ளிக்கு உடனடி குடிநீர் வசதி மற்றும் சத்துணவு பொருட்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here