காவேரிப்பட்டினம்:கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள காந்திநகர் ஆதிதிராவிடர் மக்களுக்கு பண்ணிஅள்ளி கிராமத்தில் தமிழ்நாடு அரசால் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த சர்வே எல்லைக் கற்களை ஆதிக்க சாதியினரைச் சேர்ந்த சிலர் பிடுங்கி வீசி அராஜகத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறை தவறிவிட்டதாக குற்றம்சாட்டியும், பட்டா நிலங்களை முறையாக ஒப்படைக்காமல் அலைக்கழித்து வரும் வருவாய் துறையை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காந்திநகரில் கருப்புக்கொடி ஏந்திய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.
மாநில தொண்டர் அணி செயலாளர் அ. மாதேஷ் சிறப்புரையாற்றி, ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு பட்டா நிலங்களில் ஆதிக்க சாதியினரின் தலையீடு மற்றும் அத்துமீறல்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த போராட்டத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட காந்திநகர் ஆதிதிராவிடர் காலனி மக்கள் கருப்புக்கொடி ஏந்தி கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதில் மத்தூர் ஒன்றிய செயலாளர் சூலக்கரை மூர்த்தி, வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் கோபி, கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் ஆளப்பட்டி ரமேஷ், கிறிஸ்துவ பேரவை மாநில துணைச் செயலாளர் சார்லஸ், பலராமன், மூர்த்தி, மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி, பெருமாள், ஏழுமலை, முருகன், அனிதா, சாந்தி, சந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பேசியவர்கள், தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களை முழுமையாக ஒப்படைப்பதுடன், சர்வே கற்களை பிடுங்கி சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



