நுகர்வோர் கூட்டத்தில் எழுப்பிய புகாருக்கு உடனடி நடவடிக்கை: ISI தரச்சான்று இல்லாத எரிவாயு ரெகுலேட்டர்கள், உதிரிபாகங்கள் பறிமுதல்!

0
127

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ISI தரச்சான்று இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு ரெகுலேட்டர்கள் மற்றும் எரிவாயு உதிரிபாகங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன்,நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் ஜாய்,கிருஷ்ணகிரி நகரில் பல கடைகளில் ISI தரச்சான்று இல்லாத எரிவாயு ரெகுலேட்டர்கள், கேஸ் குழாய்கள் மற்றும் எரிவாயு தொடர்பான பல்வேறு உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாததால் போலி மற்றும் தரமற்ற பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும், எரிவாயு விபத்துகள் ஏற்படும் முன்பே அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.புகாரைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா,மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ராணிக்கு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ISI தரச்சான்று இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த எரிவாயு ரெகுலேட்டர்கள், கேஸ் குழாய்கள் மற்றும் பிற எரிவாயு உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த கடை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும், உரிய அனுமதியின்றி வணிக பயன்பாட்டிற்காக வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வந்த ஒரு கோழிக்கறி கடையிலும் சோதனை நடத்தப்பட்டு, அங்கிருந்து பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திடீர் சோதனையில் பறக்கும் படை வட்டாட்சியர் பூவிதன், வட்ட வழங்கல் அலுவலர் கோகுல், நகர காவல் ஆய்வாளர் கணேஷ்குமார், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் மாவட்ட செயலாளர் மாதேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here